** அஸ்ஸலாமு அலைக்கும் ** வேலை வாய்ப்பு பற்றிய செய்தியை உங்களுக்கு தெரிந்தால் விபரங்களை ஈமெயில் அனுப்புங்கள் - mss7862003@gmail.com **

Saturday, September 7, 2013

பூமிக்கு சூடு; நமக்குக் கேடு!


ஆண்டுதோறும் பூமியின் வெப்பம் அதிகரித்து நம்மை பயமுறுத்திக் கொண்டிருக்கிறது. இன்னும் பத்து ஆண்டுகளுக்குப் பிறகு உலகெங்கும் ஆண்டுதோறும் மூன்று லட்சம் பேர் பூமியின் சூட்டின் காரணமாக மரணமடையக் கூடும் என்று ஒரு ஆய்வு கூறுகிறது. கடந்த பத்து ஆண்டுகளாக இது ஒன்றரை லட்சமாக இருக்கிறது.
பூமியைச் சுற்றிலும் ஏற்படுகிற ஒரு வகை பசை வளையம் காரணமாக ஒளி உள்ளே வருகிறது. பூமிக்கு வரும் வெளிச்சம் வானத்திற்கு திரும்புவது தடைபடுகிறது. "பசுமை இல்ல
விளைவு' எனும் இதில் சூழும் காற்றில், கரி அமில வாயு அதிகமாக இருக்கிறது. இது வெப்ப கூட்டலுக்கு காரணமாக இருக்கிறது.
வளர்ச்சியடைந்த பணக்கார நாடுகள் இந்தக் கேடுகளுக்கு காரணமாக இருக்கின்றன. சாதாரண நாடுகள் இதன் பாதிப்புகளை பெரும்பாலும் ஏற்றுக் கொண்டு வாழ்கின்றன. இதில் இந்தியாவும் ஒன்று.
உலக வெப்பமுறுதல் காரணமாக கடல் மட்டம் மெல்ல மெல்ல உயர்ந்து கொண்டிருக்கிறது. இதன் விளைவாக கடலோரப் பகுதிகள் கடலுக்குள் சென்று விடும். கடல் சூழலைப் பெரிதும் காப்பாற்றி வரும் பவளப் பாறைகள் அழிவுக்குள்ளாகும். கால்சியத்தை உள்ளீடாகக் கொண்ட பவளப் பாறைகள், சுண்ணாம்பு தயாரிக்கவும், சிமெண்ட் தயாரிக்கும் தொழிற்சாலைகளில் பயன்படுத்தவும் திருட்டுத்தனமாக வெட்டி எடுக்கப்படுகின்றன. மருத்துவத் துறை, அழகு சாதனப் பொருட்கள் தயாரிக்கவும் இவை பயன்படுத்தப்படுகின்றன.
மீனவர்கள் பிடிக்கும் பலவகை மீன்கள் பவளப் பாறையைச் சார்நதே உள்ளன. மண் அரிப்பையும் சுனாமிப் பேரலைகளால் ஆபத்து ஏற்படுவதையும் இந்தப் பவளப் பாறைகள் தடுக்கின்றன. இவற்றைத் தகர்ப்பதற்காக சயனைடு மற்றும் வெடிமருந்துகள் பயன்படுத்தப்படுவதால் சுற்றுச் சூழல் மாசுபடும் அபாயம் ஏற்படுகிறது.
உலக வெப்பமுறுதலால் இமயமலையின் பவளப்பாறைகள் உருகும். அதன் விளைவாக, இன்று ஜீவநதியாக ஓடிக் கொண்டிருக்கும் கங்கை, பிரம்மபுத்திரா போன்ற நதிகள் இனி குறிப்பிட்ட பருவங்களில் மட்டும் நீர் ஓடுகின்ற ஆறுகளாக மாறும். நிலத்தடி நீர் மட்டம் கீழே போவதோடு நீர் உப்பாகவும் மாறும். டெங்கு, மலேரியா, காலரா போன்ற நோய்கள் அதிகரிக்கும்.
மானாவாரிப் பயிர்கள், வானம் பார்த்த வேளாண்மை போன்றவை பெரிதும் பாதிக்கப்படும். இன்று செய்யப்பட்டு வரும் "கடமை விவசாய'மும் வெகுவாகக் குறைந்து போகும்.
உலக வெப்பமுறுதலுக்கு பெரிதும் காரணமான நாடுகளில் ஒன்று அமெரிக்கா. பசுமை இல்ல வாயுக்களை அதிகமாக வெளியிட்டு பசுமைச் சூழலை அது கெடுக்கிறது. கரியத்தால் ஏற்படும் மாசுபாட்டைத் தடுக்க எடுக்கும் முயற்சிகள் குறைவாகவே இருக்கின்றன.
நிலக்கரியை எரிபொருளாகப் பயன்படுத்துவதால் நிறைய சுரங்கங்கள் தோண்டப்படுவதும், அதன் காரணமாக அப்பகுதி மக்கள் நகரங்களுக்குக் கூலிகளாக இடம் பெயர்வதும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. யூகலிப்டஸ் மரங்கள் வளர்ப்பும் மக்களை காட்டுப் பகுதிகளை விட்டு வெளியேற்றுகிறது.
எரிபொருள்களைப் பொருத்தவரை சூரிய ஒளி, காற்று விசை, காட்டாமணக்கு, கரும்புச் சக்கை போன்றவற்றைக் கொண்டு மாற்று எரிபொருளை உருவாக்க வேண்டும்.
புகை வண்டிகள், மோட்டார் வாகனங்கள், விமானங்கள், தொழிற்சாலைகள் போன்றவை மரபு சாரா இயற்கை ஆற்றலால் இயக்கப்பட்டால் வெப்பமுறும் சூழலைத் தவிர்க்கலாம். தொடர்ந்த தட்ப வெப்ப மாற்றத்தை தவிர்க்க, பெட்ரோலியப் பொருட்கள், நிலக்கரி போன்றவற்றைத் தவிர்த்து, மாசுபாட்டை உண்டாக்காத இயற்கைப் பொருட்களைப் பயன்படுத்துவதன் மூலம் வெப்பமுறுதலைக் குறைக்கலாம்.
முறையான நீர் மேலாண்மையானது முறை பயிர்களுக்கு வரும் நோய்களைக் கட்டுப்படுத்தும். தட்ப வெப்ப மாற்றத்திற்கேற்ப உயர்தர விதைகள், நிலத்தை பாதிக்காத இயற்கை உரங்கள் மாசுபாட்டையும், வெப்பமுறுதலையும் குறைக்கும்.
தற்போதைய மின் பற்றாக்குறையும் நீர்ப்பாசன மேலாண்மையும் தமிழகம் எதிர் கொள்ளும் மிகப் பெரிய சவால்களாகும். இவற்றை முறைப்படுத்துதல் வேளாண்மை நீடிக்க உதவும்.
1947-இல் அன்றைய பிரதமர் "வேறு எதுவும் காத்திருக்கலாம். ஆனால் உழவுத் தொழில் காத்திருக்க முடியாது' என்றார். இன்றைய பிரதமரோ "விவசாயிகளே விவசாயத்தைக் கை விடுங்கள்' என்று உபதேசிக்கிறார்.
பணக்கார நாடுகள் எரிபொருள் உபயோகத்தைக் குறைத்துக் கொள்ள வேண்டும் என்ற கோரிக்கை முன் வைக்கப்பட்டபோது "அமெரிக்கர்களின் வாழ்க்கை முறையில் எரிபொருட்களை குறைத்துக் கொள்ளும் பேச்சுக்கே இடமில்லை' என்று கூறியது அமெரிக்கா.
சுற்றுச்சூழலில் அக்கறை கெண்டவர்கள், சுற்றுச்சூழல் பாதுகாக்கப்பட வேண்டியதன் அவசியத்தை உரக்கச் சொல்ல வேண்டிய கடமைக்கு தற்போது தள்ளப்பட்டுள்ளார்கள்.
-சுப்ரபாரதிமணியன்

source: http://dinamani.com/editorial_articles/2013/09/06/

0 comments:

Post a Comment

Photobucket